• Home
  • செய்திகள்
  • திரைத்துறைக்கு எதிரான மத்திய அரசின் புதிய மசோதா | நடந்தது என்ன?
அரசியல் இந்தியா சினிமா செய்திகள்

திரைத்துறைக்கு எதிரான மத்திய அரசின் புதிய மசோதா | நடந்தது என்ன?

காதல், பாட்டு, சண்டை காட்சிகள் என வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமில்லாது ஒரு வரலாற்றை மக்களுக்கு மிகத்துல்லியமாக கடத்தி வருகிற ஆகப்பெரும் காட்சி ஊடகமாகவும் இருப்பதுதான் சினிமா. அனால் அந்த திரைத்துறை சந்தித்து வரும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

திரைத்துறை டிஜிட்டலுக்கு மாறிய  போதே, கலைத்துறையில் ஆகப் பெரும் ஜாம்பவான்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ள சிரமம் அடைந்தனர். எனினும் புதிய இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது டிஜிட்டல் சினிமா.

ஆனால் அந்த டிஜிட்டல் சினிமாவின் ஆகப்பெரும் ஆளுமைகள் பலரே மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒளிப்பதிவு  திருத்த மசோதாவால் இப்போது அதிர்ந்து போயிருக்கிறார்.  திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் களைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது அப்போதே திரைத் துறையினர் மத்தியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது.

திரைப்பட தணிக்கை வாரியத்தை நாடியவர்களை இனி நீதிமன்றத்தை நாடி தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப்  உள்ளிட்ட இயக்குனர்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் தொடர்ச்சியாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா திரையுலகினரால் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது.

மசோதாவில் கூறியுள்ள திருத்தத்தின்படி, ஒரு படத்திற்கு U, U /A, A  என மூன்று வகையாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் இனி UA 7+, UA 30+, UA 60+ என வழங்கப்படும். ஒரு படைப்பாளியின் அனுமதி இல்லாமல் ஒரு படைப்பை எந்த வகையில் பயன்படுத்தினாலும் மூன்று மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோன்று இதுவரை 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என இந்த திரைப்பட தணிக்கை சான்றிதழ்களின்  காலம், இனி காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

ஆனால் இந்த மூன்று திருத்தங்களை விட நான்காவது திருத்தமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைப்படி தணிக்கை குழு சான்றிதழ் பெற்று திரைக்கு வந்த படத்தை மறு தணிக்கைக்கு உத்தரவிட முடியாது, ஆனால் இனி மறு தணிக்கைக்கு மத்திய அரசு அறிவுறுத்த முடியும். இதனை எதிர்த்து மத்திய அரசு சூப்பர் சென்சாராக மாற முயற்சி செய்வதாக அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரே காட்டமாக விமர்சித்திருக்கிறார்கள்.

தணிக்கை வாரியம் இருந்தபோதே பல்வேறு தடைகளை கடந்ததே ஜோக்கர் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வந்த நிலையில், இனி புறக்கணிப்பையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் பேசும் படங்கள் பெரிய அளவில் வர வாய்ப்பில்லை என்ற வாதமும் முன்  வைக்கப்படுகிறது.

ஒரு படம் தணிக்கை சான்றிதழ் வருவதிலேயே அரசியல் உள்ளதாக கடந்த காலங்களில் முன்னணி இயக்குனர்கள் பலர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள். தற்போது திரைத்துறையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு ஈடுபட்டால் அது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று நடிகர் சூர்யா தொடங்கி, கமல்ஹாசன், சரத்குமார், வெற்றிமாறன், கார்த்தி, கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஆர் பிரபு, நந்திதா தாஸ் என பலரும் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள். “குரல்வளை நெறிக்கப்படும்போது எங்களால் ஜெய்ஹிந்த் என்று கூட சொல்ல முடியாது” என்ற ராஜு முருகனின் வார்த்தையும் இதையே பிரதிபலிக்கிறது.

Indian censor board latest ban controversies central government new rule against film industry, kamal hassan against bjp, suriya against bjp, kamal hassan against modi, suriya against modi

Leave a Comment