• Home
  • இந்தியா
  • இஸ்லாமிய மாநாட்டில் பரவிய கொரோனா.. காவல்துறை வழக்குப்பதிவு?
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இஸ்லாமிய மாநாட்டில் பரவிய கொரோனா.. காவல்துறை வழக்குப்பதிவு?

தில்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய மாநாடு நடத்தியவர்கள் மீது காவல்துறை   வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லி நிஜாமுதீன் பகுதியில் செயல்பட்டு வரும் “தப்லிக் இ ஜமாஅத்” என்னும் இஸ்லாமிய பிரிவின் சார்பாக கடந்த 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இஸ்லாமிய மாநாடு நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த  இரண்டு கொரோனா நோயாளிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சூழலில் தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையில், தில்லியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அஜய் கவுதம் என்பவர் புகார் செய்திருந்தார். அவர் தனது புகாரில் ஊரடங்கு சமயத்தில் மாநாட்டை நடத்தியதன் மூலமாக தகவலை மறைத்தல் மற்றும் இந்தியாவில் கொரோனாவை பரப்பியதன் மூலம் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த அமைப்பினர் மீது வழக்குப் பதிய கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமிய மாநாடு நடத்தியவர்கள் மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்  “கொரோனாவை எதிர்த்து மக்கள் ஒருமித்துப் போராடும் நிலையில், சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment