• Home
  • அரசியல்
  • ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் – சீமான்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் – சீமான்

ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஒரு சில கட்சிகள் எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவர்களுடனேயே தேர்தல் கூட்டணி வைக்கிறார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும். அது ஏமாற்றத்தில்தான் முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். ஊழல், லஞ்சம் அற்ற அரசியல், அனைவருக்கும் வேலை, வேலைக்கேற்ற ஊதியம். தரமான இலவச மருத்துவம், அனைவருக்கும் சரிசமமான கல்வி. இதுவே எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளாகும்.

இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் என்று சொல்கின்ற திராவிட கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் நாங்கள் பொதுமக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதாகும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் ஊழல், லஞ்சத்தின் தொடக்கமாகும். ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை அரசியல்வாதிகள் லஞ்சமாகவோ, ஊழல் செய்தோ எடுத்து கொள்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை தடுக்கப்பட வேண்டும்.

பணம் மதிப்பிழப்பால் கருப்பு பணம், பயங்கரவாதம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் சாமானிய மக்கள் வங்கி வாசல் முன்பு நின்று உயிரிழந்ததும், வியாபாரிகள் தங்கள் தொழில்களை விட்டு சென்றதும் தான் நடந்தது. காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிலைபாடுகள் மாறுபட்டுள்ளது. தமிழகத்தை நாசமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதனை மாநில அரசுகள் தடுக்கவில்லை.

மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் வேண்டும். மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். இது சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காவிட்டால் பல கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாது. ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். #Seeman

Leave a Comment