• Home
  • அரசியல்
  • திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்: முதல்வர் பழனிசாமி
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்: முதல்வர் பழனிசாமி

Edappadi Palanisamy

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப உறுப்பினர்கள் தான் அமைச்சர்களாக வர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். மத்தியிலும் மாநிலத்திலும் வலிமையான ஆட்சி அமைய மெகா கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், திமுக கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என தெரிவித்தார். பிரதமர் வேட்பாளர் பற்றி ஸ்டாலின் மாறி மாறி பேசிவருவதாகவும், வாக்குகளை பெறுவதற்காக தவறான வாக்குறுதிகளை திமுக அளிப்பதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தான் பல்வேறு நிறுவனங்கள் தொழில் புரிய வருவதாக கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப உறுப்பினர்கள் தான் அமைச்சர்களாக வர முடியும் என்றும், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையப்பகுதிகளில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று கூறினார். மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி அதிமுகதான் என்றும் அதிமுக ஆட்சியில் தான் வணிகர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியோடும் செயல்பட முடிவதாக கூறினார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அதிமுக உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்; தேர்தலின் போது தில்லுமுல்லு செய்வார்கள் எனவும் விமர்சித்தார். 

Leave a Comment