• Home
  • அரசியல்
  • பிரதமர் மோடி மீது கனிமொழி குற்றச்சாட்டு!
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

பிரதமர் மோடி மீது கனிமொழி குற்றச்சாட்டு!

இந்தியாவின் காவல்காரன் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆண்டுக்கு 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் நிலவுவதாக, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் மொத்த கடன் தொகையான 72 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தொகையை பிரதமர் மோடி தள்ளுபடி செய்வதாக புகார் தெரிவித்தார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விமர்சித்தார். இந்த தேர்தலில் மத்திய அரசையும், மாநில அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று விட்டால், அதிமுகவை சேர்ந்த 28 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுக்கு வர தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தல், இரண்டு ஆட்சிகளையும் ஆட்டமிழக்க செய்யும் தேர்தல் என கூறினார். 

கீழடி ஆய்வுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு லட்ச ரூபாய் கூட ஒதுக்கவில்லை என, மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தமிழின் பெருமையை பற்றி பேசிய மோடி பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் என்றும், ஆனால், மத்திய தொல்லியல் துறையால் கடந்த 2 ஆண்டுகளாக கீழடி அகழாய்வு பணி கைவிடப்பட்டுள்ளது என்றும் வெங்கடேசன் புகார் தெரிவித்தார். 

Leave a Comment