• Home
  • அரசியல்
  • அதிமுகவுக்கு சவாலாக திகழும் அமமுக வேட்பாளர்கள் – அரசியல் விமர்சகர்கள்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவுக்கு சவாலாக திகழும் அமமுக வேட்பாளர்கள் – அரசியல் விமர்சகர்கள்

அதிமுக வேட்பாளர்களுக்கு சவாலாக விளங்கும் வகையில் அமமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக போட்டியால் யாருக்கு லாபம் என அரசியல் நோக்கர்கள் கணக்குப்போட்டு வருகின்றனர்.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெ.ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர் அறிவிப்பில் அதிரடி காட்டியவர். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், முதன் முதலாக வேட்பாளரை அறிவித்து எதிர்க்கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுப்பார் ஜெய லலிதா.

மேலும், எதிர்க்கட்சிகளின் வியூகங்கள், வாரிசு அரசியல் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதிலும், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் ஜெயலலிதா போன்று தீர்க்கமான, திடமான முடிவை எடுக்க முடியவில்லை.

தங்களது வாரிசுகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் தொகுதியைப் பெற்றுத்தருவதில் கவனம் செலுத்துவதால் இ (உ)றுதியான முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.

அதே நேரத்தில் ஆட்சியைக் காப்பாற்றவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், 18 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளதால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்க அமமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டிருப்பது அதிமுகவின் வாக்கு வங்கியைப் நிச்சயம் பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment