• Home
  • அரசியல்
  • அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன தமிழகத்தில் மும்முனை போட்டி
அரசியல் தமிழ்நாடு

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன தமிழகத்தில் மும்முனை போட்டி

சென்னை: தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தற்போது, மும்முனைப் போட்டி உருவாகியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தலைவர்கள் நாளை முதல் பிரசாரத்தை தொடங்குவதால், கோடை வெப்பத்தையும் தாண்டி அனல் பறக்கத் ெதாடங்கிவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கூட்டணிகள் அமைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன. மத்தியில் ஆளும் பாஜ, மாநிலத்தில் ஆளும் அதிமுகவை எதிர்த்து தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் திமுக தலைமையில் திறண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதில் காங்கிரசுக்கு புதுவை உள்ளிட்ட 10 தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா 2 தொகுதிகள், மற்ற 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி என்று கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டன. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோல, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்று விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தலைவர்கள் மறுத்து வந்தாலும், பாஜவை மீறி எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. அதிமுகவை ஊழல் கட்சிகள் என்று திட்டிய மத்திய அமைச்சர்களுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தமிழக அமைச்சர்கள் அமைதியாக இருந்தனர்.

மேலும், மூத்த அமைச்சர்களுக்கு வேண்டிய கான்ட்ராக்டர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டது. குட்கா ஊழல் உட்பட பல ஊழல்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆனாலும், அதிமுக பாஜவுக்கு பணிந்தே செயல்பட்டு வந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதிமுக, பாஜ கூட்டணியை அறிவித்தன. இந்தக் கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டணியில் தொகுதிகள் பிரிப்பதில் மோதல் எழுந்தன. யார் பெரிய கட்சி என்பதிலும் மோதல் எழுந்தது. தொகுதிகள் பங்கீட்டிலும், பிரிப்பதிலும் கடும் மோதல் எழுந்தன. இதனால் யார் யாருக்கு எந்த தொகுதிகள் என்று அறிவிப்பதற்கான கூட்டம் 2வது முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. இந்தக் கூட்டத்தை பாமக, தேமுதிக புறக்கணித்தன. ஆனாலும் தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காலையில் அதிமுக கூட்டணியின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு அமமுக வேட்பாளர்களை அறிவித்தது.

இவ்வாறு தொடர்ந்து அரசியல் கட்சிகள் மாறி, மாறி அதிரடியாக நடவடிக்கைகளில் இறங்கினர். இதனால் தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து பரபரப்பான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் பாஜவும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனாலும், 90 சதவீதம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதற்கிடையில் தமிழகத்தில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகின்றன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை உடனடியாக ெதாடங்க திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, அமமுக ஆகிய 3 அணிகள் உருவாகியுள்ளது. இந்த 3 அணிகளுக்கு இடையேதான் போட்டி உருவாகியுள்ளது. அரசியல் களத்தில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இருந்தாலும் அதை போட்டியாக கருத முடியாத நிலையே உள்ளது.

இதனால் பிரதானமான 3 அணிகள்தான் தமிழகத்தில் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உடனடியாக அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்குகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் நாளை திருவாரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் 20ம் தேதி சேலம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தேனியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நாளை பிரசாரத்தை தொடங்குகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஏற்கனவே தமிழகத்தில் பிரசாரம் செய்தனர். மீண்டும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டதால், வேட்பாளர்கள் தலைவர்களை சந்தித்து ஆசி பெறுதல், நிர்வாகிகளை சந்தித்தல் போன்ற பணிகளை உடனடியாக தொடங்கி விட்டனர். இதனால் கோடை வெப்பத்தையும் தாண்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Comment