செய்திகள் தமிழ்நாடு

நீர்நிலைகளில் இரை தேடும் வாத்துகள்

பொன்னேரி: முட்டை மற்றும் கறிக்கு வளர்க்கப்படும் வாத்துகள், நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் இரை தேடி வருகின்றன. நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருவதால், வாத்து வளர்ப்பவர்கள் முன்கூட்டியே விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட வாத்து வளர்ப்பவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும், 800 — 1,000 வரையிலான வாத்துகளை வைத்து பராமரிக்கின்றனர். இவை முட்டை மற்றும் கறிக்காக வளர்க்கப்படுகின்றன.குளம், குட்டை ஆகியவற்றில் தேங்கியுள்ள தண்ணீரிலும், இவை இரை தேடுகின்றன. கடந்த ஆண்டு, மழை குறைவாக பொழிந்ததால், நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை. ஒன்றிரண்டு இடங்களில், உள்ளவையும் வேகமாக ஆவியாகி வருகின்றன.நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருவதால் வாத்து வளர்ப்பவர்கள் கவலை அடைந்து உள்ளனர். மழைக்காலம் வரும்வரை எப்படி வாத்துக்களை காப்பாற்றுவது என, தெரியாமல் தவித்து வருகினறனர்.இது குறித்து, வாத்து வளர்ப்பவர்கள் கூறியதாவது:வாத்துகள் இரண்டு ஆண்டுகள் வரை முட்டையிடும். சந்தை நிலவரத்திற்கு தகுந்தபடி முட்டைகள் விலை போகும். முட்டையை நிறுத்தும் வாத்துகளை கறிக்காக விற்பனை செய்து விடுவோம்.மேலும், ஒரு ஜோடி, 300 — 400 ரூபாய் வரை விலை போகும். நீர் நிலைகள் வறண்டு வருவதால், வாத்துகளுக்கு இரை தேடுவது பெரும் சிரமமாக உள்ளது.கோடையில் மழை பொழிந்து நீர்நிலைகளில், ஒரளவிற்கு தண்ணீர் தேங்கினால், வாத்துகளை வளர்ப்பது எளிது. இல்லையென்றால் முன்கூட்டியே அனைத்து வாத்துகளையும் விற்பனை செய்துவிட திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment